Posted on Leave a comment

புதிதாக மாடித்தோட்டம் தொடங்குவது எப்படி ?

1. மாடித்தோட்டம் துவங்க சரியான நேரம்னு பார்த்தால்… நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கினால் தைபட்டத்தில் விதைக்கலாம். அல்லது மே அல்லது ஜூனில் தொடங்கினால் ஆடிப்பட்டத்தில் விதைக்கலாம்.

2. முதலில் மாடி தரைக்கு ரெண்டு கோட் வாட்டர் ப்ரூஃப் பெயிண்ட் அடிக்க வேண்டும். இது லிட்டர் 300 ருபாய். நாலு லிட்டர் பக்கெட் சுமார் 1000 ருபாய் வரும். நாலு லிட்டர் பெயிண்ட் 400 சதுரடிக்கு போதுமானது… ரோலர் வாங்கிக் கொண்டால் நாமே ஈசியாக அடித்து விடலாம்…

3. அடுத்ததாக எத்தனை தொட்டிகள் வைக்கப் போறீங்கன்னு ப்ளான் பண்ணுங்க. குறைந்தபட்சம் 40 தொட்டிகளாவது இருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருக்கும். பட்ஜெட் பிரச்சினை என்றால் 20 தொட்டிகளில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். இப்ப 40க்கான திட்ட வரைவைப் பார்க்கலாம்.

4. வாங்க வேண்டியவை – குரோ பேக் – 40, செம்மண் – 20 சட்டி, மண்புழு உரம் – 100 கிலோ, கோகோபீட் 5 கிலோ ப்ளாக்ஸ் – 25, வேப்பம்புண்ணாக்கு – 2 கிலோ, (ஆப்ஷனல்: சூடோமோனஸ் – 100 கிராம், அசோஸ்பைரில்லம் – 100 கிராம், ட்ரைகோடெர்மா விரிடி – 100 கிராம்) மொத்த செலவு தோராயமாக 7000 – 8000 ருபாய்கள்

5. குரோபேகுக்கு பதில் பழைய ப்ளாஸ்டிக் கேன்கள் கிடைத்தால் வாங்கலாம். நீண்ட காலம் உழைக்கும்… எங்க வீட்டில் இவ்வாறான தொட்டிகள் 200 இருக்கு.

6. நாற்பது குரோபேகுகளை கீழ்கண்ட அளவுகளில் வாங்குவது நல்லது…

ஒரு அடி உயர குரோபேக் – 20
– இது கீரைகள், தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள், மல்லி, புதினா, பச்சை மிளகாய் வளர்ப்புக்கு ஏற்றது..

ஒன்னரை அடி உயர குரோபேக் – 20
– இது வெண்டை, கருவேப்பிலை, அவரை, காராமணி, பாகல், புடலை போன்ற கொடி வகைக் காய்களுக்கு ஏற்றது.

அகலம் எல்லாமே ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி போதுமானது…

7. கோகோபீட்டை தண்ணீரில் ஊற வைத்து ஒரு முறை அலசி எடுத்து மேலே பாயிண்ட் 4ல் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மேலே ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு பைகளில் (குரோபேக்) நிரப்ப வேண்டும்.

8. குரோபேக்களை கீழே வைத்தால் தரை ஈரம் காயாமல் பிரச்சினை வரும் என்பதால் செங்கல் வைத்து அதன் மேல் தூக்கி வைக்க வேண்டும். அல்லது 18 குரோபேக் வைக்கும் மூன்று அடுக்கு இரும்பு ஸ்டேண்ட் 1700 ருபாய் செலவில் நாமே அரை மணி நேரத்தில் செய்து விடலாம். எப்படி என்று ASK Jhansi யூட்யூப் சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

9. மண் கலவை நிரப்பப்பட்ட குரோபேகுகளில் தினமும் சிறிது தண்ணீர் விட்டு மூன்று வாரங்கள் வைக்க வேண்டும். அதற்குள் நுண்ணுயிர்கள் நன்கு பெருகி மண்ணை வளப்படுத்தி விடும். அதன் பின்னரே விதை போட வேண்டும்.

10. அடுத்ததாக தரமான விதைகளாகப் பார்த்து வாங்க வேண்டும். முதலில் ஆரம்பிக்கும் போது நாட்டு விதையோ ஹைப்ரிட் விதையோ கிடைப்பதைக் கொண்டு துவங்கி விட்டு பின்னர் அடுத்த சீசனில் நாட்டு விதைக்கு மாறிக் கொள்ளலாம்.

11. மூன்று வாரங்கள் ஆவதற்குள் விதைகளை டிஸ்போசபிள் டம்ளர்கள் அல்லது சீட்லிங் ட்ரேவில் மண் கலவை நிரப்பி அதில் போட்டு நாற்று உருவானதும் எடுத்து நடலாம்.

12. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கை மண்புழு உரம் அல்லது மக்கிய சாணம், வாரம் ஒரு முறை மீன் அமிலம் அல்லது பஞ்ச கவ்யா தெளித்தால் போதுமானது.

13. ஜூலை முதல் மார்ச் வரை பிரச்சினை இல்லை. அப்படியே வளரும். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் வெய்யில் கொளுத்தும் போது ஷேட் நெட் போட்டுக் கொண்டால் நல்லது. அல்லது வாடகை வீடு என்றால் ஜூன் ஜூலையில் விதை போட்டு மார்ச்க்குள் அறுவடை எடுத்து விட்டு ஒரு ஓரமாக தூக்கி வைத்து விட்டால் மீண்டும் அடுத்த ஜூன் ஜூலை மாதம் விதை போட்டுக் கொள்ளலாம். எல்லா காய்கறி செடிகளுக்குமே அதிகப்பட்சம் ஆறு மாதங்கள் தான் ஆயுள். அதனால இவ்வாறு செய்து ஷேட் நெட் இல்லாமலே சமாளிப்பது சுலபமே…

இதை எல்லாம் Step By Step செய்முறை வீடியோக்களாக ASK Jhansi யூட்யூப் சேனலில் “வீட்டு விவசாய பண்ணை” என்ற ப்ளே லிஸ்ட் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்…

Posted on Leave a comment

ஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் ?

எப்ப பாரு ஃபேஸ்புக் தானா…? எப்ப பாரு யூட்யூப் தானா…? எப்ப பாரு ட்விட்டர், வாட்ஸ் ஆப் தானா…?! மொபைல் பார்க்காம இருக்கவே மாட்டியா…?

நம்மை சுற்றி இருப்பவங்க இப்டி கேட்க தான் செய்றாங்க… ஆனா ஏன் சோஷியல் மீடியால இருக்கோம்ங்கற ரகசியம் நமக்கு மட்டும் தானே தெரியும்…

ஆமா ஏன்…???

மனிதனுடைய தேவைகளை ஐந்து அடுக்கா பிரிச்சிருக்கார் மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர்.

முதலில் அடிப்படையான உடல்சார் தேவைகள்:

உணவு, உடை, இருப்பிடம், சுவாசம், செக்ஸ், மலஜலம் கழித்தல்.

இவற்றை அடைவதே மனிதனின் முதல் போராட்டமாக இருக்கிறது. எவ்விதத்திலாயினும் இவற்றை அடைந்தே தான் தீர வேண்டி இருக்கிறது. இவை ஓரளவு பூர்த்தியான பின் அவனுக்கு அடுத்த தேவை ஏற்படுகிறது.

இரண்டாவதாக பாதுகாப்பு தேவைகள்:

உடல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை எதிர்பார்த்தல், குடும்ப பாதுகாப்பு, நல்ல வேலைவாய்ப்பு, வளங்களை பெருக்கி பாதுகாத்தல், சேமிப்பு இதெல்லாம் சொல்லலாம்.

இவை நிறைவேறும் போது மூன்றாவதாக சமூத தேவைகள்:

நட்புறவு, காதல், அன்னியோன்னிய உறவுகள், பாசம், நேசம் இப்படி.

சரி எல்லாமே ஓரளவு பூர்த்தியாயிருச்சு. இப்பவும் நமக்கு தேவைகள் இருக்கே.

அது தாங்க கௌரவ தேவைகள்:

பிறரிடம் இருந்து மதிப்பு மரியாதை எதிர்பார்ப்பது, சுயகௌரவம், புகழுக்கு ஆசைப்படுதல், பாராட்டை எதிர்பார்த்தல், அங்கீகாரம் தேடுதல், தன்னம்பிக்கை இவையெல்லாம்…

இங்கே தாங்க சோஷியல் மீடியாக்கள் வருது. பிறரிடமிருந்து பாராட்டையும் நம் செயலுக்கான அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று. அது சோஷியல் மீடியாக்களில் கிடைப்பதால் அதில் மூழ்கிப் போகிறது மனிதமனம். இது தான் நிதர்சனம்.

சரி அடுத்து என்ன… கடைசியா தன்னிலை புரிதல். புகழும் கூட போரடித்து போகும் நிலை இது. அதாவது ஒரு நிறைவுநிலை, நல்லது கெட்டது அறிதல், பிறருக்கு வழிகாட்டுதல், எல்லாரையும் அரவணைத்து செல்லுதல் இப்படி… இந்நிலை எல்லாருக்கும் வாய்த்தல் அரிது. எனினும் நான்காவது தேவை முழுமையாக பூர்த்தியாகும் பட்சத்தில் ஐந்தாவது தேவை மனிதனுக்கு ஏற்படுகிறது.

இதில் நாம் எங்கே நிற்கிறோம் என்று உணர்ந்தால் நமக்கான அடுத்த தேவையும் அந்த தேவைக்கான தேடலின் அவசியமும் நமக்கு நன்கு விளங்கும்.

Posted on Leave a comment

அதிகமாக டைவர்ஸ் ஆகக் காரணம் என்ன ?

டைவர்ஸ்… டைவர்ஸ்… டைவர்ஸ்…
சர்வ சாதாரணமாகி விட்டது இன்று…
அதிலும் பல திருமணங்கள் ஒரே வருடத்துக்குள் தோற்று விடுகின்றன…

பெண் வீட்டில் சொல்லும் காரணம் கணவன் மனைவியைத் தொடுவதில்லை… அன்பாகக் காதலாக இருப்பதில்லை… ஆசைகளை நிறைவேற்றுவதில்லை… சைகோ அவன்…

மாப்பிள்ளை வீட்டில் சொல்லும் காரணங்கள்… பெண் அடங்காபிடாரி… யாரையும் மதிப்பதில்லை… வேலைகள் செய்வதில்லை… போன் பேசிக் கொண்டே இருக்கிறாள்… இன்னும் சில…

தவறு எங்கே யாரிடம்…?!
கேட்பவருக்கு தான் மண்டையை பிச்சுக்கும்…

இதுக்கு என்ன தான் தீர்வு…?!

உளவியல்ரீதியில் பார்த்தால்… பெண்கள் சொல்லும் பிரச்சினைகளுக்கு பொறுமையே தீர்வு… தனக்கு ஒன்றுமே தெரியாதென்று நாணிக்கோணி படுக்கையறைக்குள் நுழையும் பெண் தன் கணவனுக்கு மட்டும் எல்லாமே தெரிந்திருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்…?! வெட்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானதல்லவா…

கொஞ்சம் அவகாசம் தந்து, மனம் போல நடந்து கொண்டால் யாவும் சுபமாகுமே… ஆனால் அப்படி பொறுமை இல்லாமல் அவனை மட்டம் தட்டுவது, வம்பிழுத்து சண்டை போடுவது போன்ற காரணங்களால் அவனால் உடலளவில் தயாராக முடிவதில்லை… அதை ஆண்மைக்குறைவு என்று முத்திரை குத்தி வீட்டில் சொல்லி பெரிதுபடுத்தி டைவர்ஸ் வரை போய் விடுகிறார்கள்…

அடுத்ததாக ஆண்கள் சொல்லும் காரணம் சண்டை போடுகிறாள், யாரையும் மதிப்பதில்லை என்பது… அந்நிய சூழலில் வளர்ந்த பெண்ணின் குணம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். எடுத்ததுமே தனக்கு நல்ல மனைவியாக தன் பெற்றோருக்கு நல்ல மருமகளாக வாழ வேண்டுமென்று எதிர்பார்ப்பது மடமை…

அன்பு காட்டி அரவணைத்து தன் வழிக்குக் கொண்டு வந்து தான் அவளைத் திருத்த வேண்டுமே தவிர… அதற்காக படுக்கையில் ஒதுக்கி வைத்தால் அது தன் மேலேயே அவள் அவதூறு சொல்ல வழி ஏற்படுத்தி விடும்… மனைவியின் மேல் பிரியத்தைக் காட்டி விட்டு அந்த பிரியம் இல்லையெனில் எத்தனை கஷ்டமென்று உணர்த்துவது ஆணின் கடமை மற்றும் திறமை… அதை உணர்த்தி விட்டால் பெரும்பாலான பெண்கள் அவன் மனம் போல மாறி விடுவார்கள்…

இந்த டைவர்ஸ் கலாச்சாரத்தில் பெற்றோரில் பங்கும் மிகையானது… பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டால் அவர்களின் வீட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது… தலையிடுவது ஒருபுறம் இருக்கட்டும்… காது கொடுத்து கேட்கக் கூட கூடாது… கேட்டால் வீணாக அவள் வாழ்வில் தலையிடுவோம். பின் அவள் வாழ்வு தான் கேள்விக்குறியாகும்…

முதன்முதலில் பள்ளியில் கொண்டு விடுகிறோம் நம் குழந்தைகளை… குழந்தை அழுகிறதென்று வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறோமா…?! இல்லையே… அவள் பழகும் வரை மனதைக் கல்லாக்கிக் கொண்டு காத்திருக்கிறோமல்லவா… கல்விக்காக… அதே போல தான் திருமணம் முடிந்து போனாலும் மகள் கண்ணைக் கசக்கினாலும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்… அவள் வாழ்க்கைக்காக…

ஆசிரியர் திட்டினால் அது அவளுடைய நல்லதுக்கு தான் என்று பொறுமை காப்பதைப் போல தான் கணவன் திட்டினாலும் சண்டை பிடித்தாலும் “உன் பிரச்சினையை நீயே சமாளித்துக் கொள்… என்னிடம் சொல்லாதே…” என்று சொல்லி நாசூக்காக விலகி விட்டால் வாழ்வின் சூட்சுமம் அறிந்து வாழப் பழகிக் கொள்வார்கள்…

ஆண்மகனும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை தன் பெற்றோரிடம் சொல்லக் கூடாது. தன்னை நம்பி வந்தவள் தன் ஆதங்கங்களை தன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வாள் என்று உணர்ந்து அவள் மனம் போல நடந்து கொண்டால் பிரச்சினை வராதல்லவா…

ஒவ்வொரு திருமணத்துக்கு முன்பும் ப்ரீமேரிட்டல் கவுன்சிலிங் அவசியம். அதுக்காக செலவு செய்து தான் கற்க வேண்டும் என்பதில்லை. பெற்றோரே அதைத் தரலாம் அல்லது வேறு உறவினர்களும் சொல்லித் தரலாம்… என்ன தான் செல்லம் செல்லமாக வளர்ந்திருந்தாலும் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்று புரிய வைக்க வேண்டும். மனதளவில் அவர்களை திருமண வாழ்க்கைக்கு தயார்ப்படுத்த வேண்டும்…

அதுக்காக… பெற்றோர் தமக்குக் கிடைத்த கசப்புகளை வைத்து மாமியார் என்றால் பேய், நாத்தனார் என்றால் பூதம், ஆரம்பத்திலேயே உன் கணவனைக் கைக்குள் போட்டுக் கொள் என்றெல்லாம் உபதேசம் செய்தால் கதையே முடிந்து விடும்… “யார் எப்படி இருந்தாலும் சரி, நீ இனிமையானவளாக இரு… அதிகப்பட்ச பிரியம் காட்டு…” என்று சொல்லித் தர வேண்டும்… நம் பிள்ளைகளின் குணத்தை இனிமையாக்க நாம் முயற்சித்தால் போதும்… பிறரின் குணத்தில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கு…

விருப்பம் இல்லாத திருமணங்களைக் கட்டாயப்படுத்தி செய்து வைக்கக் கூடாது. அது மகா தப்பு. பின்னர் டைவர்ஸில் முடிந்த பின் பெற்றோர் தான் அதிகமாக அழ வேண்டி இருக்கும். வாழ்க்கைன்னா என்னவென்று புரிந்த பின் இல்லறத்தில் நுழைந்தால் அது நிச்சயமாகத் தோற்காது…

Posted on Leave a comment

எழுத்து மூலம் சம்பாதிப்பது எப்படி

நீங்கள் தமிழில் எழுதி சம்பாதிக்கலாம்.

இங்கே இருக்கும் ஃபோட்டோ என்னன்னு யோசிக்கிறீங்களா… ? இது என்னுடைய ஆட்சென்ஸ் ரிப்போர்ட்… அதாவது எழுத்து மூலம் எனக்கு கிடைத்த தொகை… ?

கூகிள் வழி விளம்பரங்கள் தமிழுக்கு சில வருடங்கள் முன் தான் கொடுத்தார்கள். சும்மா நானும் ஒரு ப்லாக் துவங்கி வெட்டியா வெச்சிட்டு இருந்தேன். ப்லாக் துவங்குவது ஃப்ரீ தான்… காசெல்லாம் இல்ல. ?

அப்றம் இந்த லாக் டவுன்ல ரொம்ப வெட்டியா இருந்தப்ப கொரோனா பற்றியும் இன்ன பிறவுமென இங்கே முகநூலுக்காக அவ்வப்போது எழுதும் கட்டுரைகளை அங்கே என் ப்லாகிலும் பதிந்து வந்தேன். நான் செய்தது அவ்வளவு தான். வேறெதுவும் செய்யவில்லை. அதை ப்ரொமோட் பண்ணவும் இல்லை…

இன்னும் சொல்லப் போனா அது என் ப்லாக் என்று காட்டிக் கொள்ளவும் எனக்கு விருப்பம் இல்லாததால் அந்த பெயரையும் யாருக்கும் நான் பகிரப் போவதில்லை… கேட்க வேண்டாம்… ?

தானாக ஆர்கானிக் சர்ச்சில் அந்த பக்கங்கள் வர… அதன் மூலம் கிடைத்த சிறு தொகை தான் கீழே நீங்கள் பார்க்கும் ரிப்போர்ட்… என்னிடம் 2006ம் ஆண்டு முதல் ஆட்சென்ஸ் கணக்கு இருக்கு. அதே கணக்கு தான் இன்று வரைக்கும்…

அதென்ன ஆர்கானிக் சர்ச்…?! நீங்கள் கூகிளில் எதாவது தேடும் போது அது சம்பந்தமான கட்டுரைகளைக் காட்டுகிறதல்லவா…?! அதை நீங்கள் க்ளிக் செய்து திறந்து பார்ப்பீர்கள் அல்லவா…

உதாரணமாக மாடித்தோட்டம் பற்றித் தேடும் போது முதல் பக்கத்தில் ஒரு இருபது லின்க்ஸ் காட்டும். ஆனா இருபது பேர் தான் மாடித்தோட்டம் பற்றி எழுதி இருப்பார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆயிரக்கணக்கான பேர் எழுதி இருப்பார்கள். அதில் சிறந்த கட்டுரைகள் என்று கூகிள் நினைக்கும் 20 பக்கங்களை முதல் பக்கத்தில் காட்டுகிறது.

அதில் நீங்கள் எழுதிய கட்டுரை வந்து விட்டால் நீங்கள் அந்த தேடல் வார்த்தைக்கு (கீ வேர்டுக்கு) ரேன்கிங்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இவ்வாறு பணம் எதுவும் நாம் செலவு செய்யாமலே, கட்டுரையின் எழுத்துக்காக ரேங்கிங் வந்து விட்டால் அதற்கு ஆர்கானிக் சர்ச் என்று பெயர்…

சில நேரம் AD என்று போட்டு மேலே வரும்படி கூகிள் காட்டும். அது பணம் செலுத்தி விளம்பரத்துக்காக அடைய நினைப்பது. அதற்கு இன்ஆர்கானிக் சர்ச் என்று பெயர்…

இவ்வாறு ஆர்கானிக் ஆக என் கட்டுரைகள் வந்ததால் எனக்கு கிடைத்த சிறு தொகை தான் கீழே நீங்கள் பார்ப்பது. யூட்யூபை விட நான்கு மடங்கு குறைவான உழைப்பு போதும் இதற்கு. செலவும் இல்லை. நல்ல எழுத்து வன்மை உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

பட் நான் இதை முன்னெடுக்கக் காரணம் ஆட்சென்ஸ் வருமானம் அல்ல. எங்க கம்பெனிக்கான விளம்பரமும் அந்த பக்கங்களில் இருக்கும். இதன் மூலமும் நான் விற்பனை அதிகரிப்பை டார்கெட் செய்கிறேன். உண்மையில் எங்களுக்கு ஆட்சென்ஸில் கிடைப்பதை விட அதிகமாக ஆட்வேர்ட்ஸுக்கு நாங்கள் செலவளிக்கிறோம்.

அதென்ன ஆட்வேர்ட்ஸ் ? கூகிள் நமக்கு எப்படி காசு தருது ? யாரோ விளம்பரம் தரும் போது அதைத் தானே நமக்கு ஷேர் பண்ணுது ? அந்த யாரோக்கள் தம் விளம்பரத்தை பணம் கட்டி உள்ளீடு செய்வார்கள் அல்லவா… அந்த உள்ளீடுக்கான தளத்தின் பெயர் தான் ஆட்வேர்ட்ஸ்.

சோ, நான் ஒரு பக்கம் கூகிளுக்கு இவ்வாறு பணம் கட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் கூகிளிடம் சம்பாதிக்கிறேன். இங்க வாங்கி அங்க கொடுப்பதைப் போல. எனக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. எனது எழுத்தை வைத்து எங்கள் தொழிலை வளர்க்கிறேன். அது மட்டும் தான்…

இப்ப அந்த ரிப்போர்ட்ல பாருங்க…
இன்று எனக்கு 0.43 டாலரும் நேற்று 0.53 டாலரும் கிடைத்துள்ளது. அதே போல கடைசி ஏழு நாட்களில் 2.35 டாலரும் இந்த மாதம் 8.11 டாலரும் கிடைத்துள்ளது. அதற்கு கீழே பாருங்கள். போன வருட கம்பேரிசனும் உள்ளது. அதாவது போன வருடம் இதே மாதத்தை விட 8.11 டாலர்கள் இந்த மாதம் அதிகம். அதாவது போன வருடம் ஜீரோ வருமானம். ஏன்னா நான் எதுவுமே போடலையே… ??? இப்பவும் கூட நான் முகநூலில் எழுதுவதை தான் எப்பாவது வாரம் ஒரு முறை அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர். ???

சரிங்க… இப்ப நீங்க ஒரு யூட்யூபரா ? உங்க கிட்ட 1000+ சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கும் யூட்யூப் சேனல் இருக்கா ?

நீங்கள் வீடியோவில் ரிவ்யூ செய்வதற்கு ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் இலவசமாக நாங்கள் அனுப்பி வைக்க தயாராக இருக்கிறோம்… அது மட்டுமல்லாமல் உங்கள் வீடியோ மூலம் விற்பனையாகும் பொருட்களுக்கு கமிஷனும் உண்டு…

இதில் கலந்து கொள்ள உங்க பேர், முகவரி, தொலைபேசி எண், சேனல் பெயர், சேனல் லின்க், சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை ஆகியவற்றை chanakiyan.jhansi@gmail.com க்கு அனுப்பி வைய்யுங்கள்…

 

Posted on Leave a comment

கோழிப்பண்ணை லாபமா ஆட்டுப்பண்ணை லாபமா

நேற்று ஒரு குழுமத்தில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்…

“ஆட்டுப்பண்ணை வைத்தால் லாபமா… இல்லை கோழிப்பண்ணை வைத்தால் லாபமா…” என்று…

அதில் நிறைய பேர்

“ஆட்டுப்பண்ணை கோழிப்பண்ணை வைத்து லாஸ் ஆனவர்களைக் கேளுங்க…”

என்பதைப் போல நெகடிவ் ஆக கமெண்ட் செய்திருந்தார்கள்.

இது தான் என்றில்லை. எல்லா தொழிலிலுமே லாப நஷ்டங்கள் உண்டு. ஓட்டல் கடை வைத்து லாஸ் ஆனவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அதுக்காக எல்லா ஓட்டலும் லாஸ் என்று சொல்ல முடியுமா…?!

சரி எப்படி லாபகரமாக நடத்துவது ?

1. முதலில் உங்க ஏரியாவில் என்ன ரக ஆடு, என்ன ரக கோழிகள் மக்கள் விரும்பி உண்பார்கள் என்று பாருங்கள். கன்னியாகுமரி மக்கள் உண்ணும் வெரைட்டியை செங்கல்பட்டு பண்ணையில் வளர்த்தால் போக்குவரத்து கட்டுப்படி ஆகாமல் லாஸ் தான் ஆகும்.

2. பின்னர் வீட்டு புறக்கடையில் முதலில் 10 ஆடுகள், 30 கோழிகள் வாங்கி ஒரு வருடம் வளருங்கள். அதில் நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, கழிவுகள் மேலாண்மை குறித்த அனுபவங்கள் கிடைக்கும்.

3. அதன் பின் இரண்டும் இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையாக துவங்குங்கள். வேறு பணியில் வேறு ஊரில் இருக்கிறேன். பண்ணையை கவனிக்க ஆள் போட்டுக் கொள்வேன் என்பவர்களுக்கு இது லாயக்கே இல்லை. அந்த இடத்துக்கு அருகில் நீங்கள் தங்கி இருக்க வேண்டும். அதுவே உங்களுக்கு முழு நேரத் தொழிலாக இருந்தால் லாஸ் ஆக வாய்ப்பில்லை.

4. பண்ணை வைப்பதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு முன் அதற்கான தீவனத்தைத் திட்டமிடுங்கள். காசு கொடுத்து வெளியில் இருந்து ரெடிமேடாக தீவனம் வாங்குவது நஷ்டம் ஏற்பட ஒரு முக்கிய காரணம். பசுந்தீவனத்தை நாமே வளர்த்துக் கொண்டு அடர்த்தீவனத்தை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

5. மிக மிக குறைவான இடத்தில் கூட பசுந்தீவனத்தை வளர்த்துக் கொள்ள நிறைய டெக்னாலஜி வந்து விட்டது… குறிப்பாக அசோலா வளர்ப்பு. அடுத்ததாக ஹைட்ரோஃபோனிக்ஸ். இதில் ஹைட்ரோஃபோனிக்ஸை சரியானபடி திட்டமிட்டால் அந்த குடிலிலேயே காளானும் வளர்த்து லாபம் பார்க்க முடியும்.

6. ஒரே ஒரு உதவியாள் மட்டும் வைத்துக் கொண்டு பண்ணையை நீங்களே கவனிக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் இதற்காக செலவிட்டால் போதும்…

7. பக்கத்து ஊரில் ஒரு சிறிய கறிக்கடையும் ஒரு மாலை நேர உணவகமும் சைடு பிசினெஸ் ஆக ஸ்டார்ட் பண்ணுங்க. கோழி மற்றும் ஆடுகளை முடிந்தவரைக்கும் அதில் அழிமானம் செய்ய முயலுங்கள். நேரடி விற்பனை அதிக லாபம் தரும். உணவகம் முடியாவிட்டால் ஒரு தள்ளுவண்டி சூப் மற்றும் சில்லி கடையாவது போடலாம்.

8. மாலை நேர உணவகத்தில் கறிக்கடையில் விற்பனையாகாத மட்டன், சிக்கனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உணவகத்தில் மிச்சமாகும் உணவுகளை ஆடு, கோழிகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.

இவ்விதத்தில் ஷெட்யூ போட்டு செய்தால் நாள் முழுக்க நாம் பிசியாக இருப்போம். பல விதங்களில் வருமானம் வருவதால் ஒன்றில் லாஸ் ஆனாலும் இன்னொன்று நமக்கு கை கொடுக்கும்.

அரை ஏக்கர் இடம் இருந்தாலே போதும். இத்தனையையும் செய்து விடலாம். மூன்று லட்சம் செலவில் சிம்பிளான கொட்டகை அமைத்துக் கொண்டு அடர் தீவனத்துக்காக ஒரு லட்சம், ஆடு கோழிகள் வாங்க மூன்று லட்சம் என மொத்தம் ஏழு லட்ச ருபாய் தேவைப்படும். மேற்கொண்டு கடை போட, பசுந்தீவனம் பயிரிட மூன்று லட்சம் வேண்டும்.

ஆக மொத்தமாக கையில் பத்து லட்சம் இருந்தால் அருமையான தொழில் ரெடி. சொந்த காசு இருக்க வேண்டும். கடன் வாங்கி துவங்கினால் வட்டி கட்டி மீள முடியாது. இது போக ரிடர்ன்ஸ் எடுக்க குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்பதால் அதுவரை ஆள் செலவு மற்றும் வீட்டு செலவுகளை சமாளிக்கவும் கையில் ஒரு தொகை இருக்க வேண்டும்.

இவ்வாறு திட்டமிட்டு செய்தால் வருங்கால பண்ணையார் நீங்க தானுங்க…

Posted on Leave a comment

கோழிகள் இறப்பைத் தடுக்க – All in One Medicine For Chicken

லிட்டருக்கு 15 ருபாய் மட்டுமே செலவாகும்…

?

ஏன் கோழிகள் திடீர் திடீரென்று இறக்கிறது…?! ஏன் கோழிகளுக்கு நோய்கள் வருகிறது…?! நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகப்படுத்துவது ?

நாங்க கோழி வளர்க்க ஆரம்பித்த போது இதற்கெல்லாம் விடை தேட ஆரம்பித்தேன். இத்தனைக்கும் நாங்க மொட்டைமாடியில் ஒரு ஹாபியாக தான் வளர்க்கிறோம். கிட்டத்தட்ட 15+ கோழிகள் அடுத்தடுத்து சாக…

அமோனியா வாயு மற்றும் ஜீரணக்கோளாறு தான் அதற்கான முக்கிய காரணம் என்று இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன்… கோழிகளுக்கு சரியாக ஜீரணம் ஆகாததால் அதற்கு தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது…

இதற்காக லிட்டர் 400 ருபாய் விலை கொண்ட மூலிகை மருந்தை வாங்கி பயன்படுத்திய போது ஓரளவுக்கு நோய் தாக்கமும் இறப்பும் குறைந்தது. அதை நிறுத்தியதும் மீண்டும் கோழிகள் இறக்கத் துவங்கின. இது விலை மிகவும் அதிகமாக இருந்ததால் இது போன்ற ஒரு மருந்தை என்னுடைய சில பரிசோதனைகளின் மூலம் நானே தயாரித்து அதை எங்கள் கோழிகளுக்குப் பயன்படுத்தி இறப்பையும் நோய் தாக்கத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டேன்.

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னன்னா… பொதுவாக கோழிகள் உண்ணும் உணவில் 30 சதவீதம் செரிமானம் ஆகாமலேயே வெளியேறி விடுகிறதாம்… இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது நன்கு செரிமானம் ஆவதால் தீனிச்செலவு நமக்குக் குறையும். கழுத்தில் வீக்கம், ஈரல் நோய்கள், சளி தாக்காது…

இந்த மருந்தை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். நாங்கள் விற்பனை செய்வதில்லை. எங்களுக்கு வியாபார நோக்கமும் இல்லை. மூலிகை வில்லைகள் கலக்காமல் இதை கோழிகளின் மேலும் கூண்டிலும் ஸ்ப்ரே செய்யும் போது அமோனியா மற்றும் மீத்தேன் வாயு கட்டுப்படுகிறது. துர்நாற்றம் நீங்கி விடுகிறது…

கோழிகளின் எச்சம் நொதிக்கப்பட்டு சில மாதங்களில் அதுவும் ஒரு உயிரி உணவாக மாறி விடுகிறது. அதனால் கோழிகளின் ஆரோக்கியம் கூடும். கோழிகளின் கூண்டை சுத்தம் செய்யும் வேலை நமக்கு அறவே இல்லை… பயோஃப்ளாக் மீன் வளர்ப்பில் ப்ரோபயாடிக் மூலம் மீன் எச்சம் கூட உணவாக மாறுவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா… அதே டெக்னாலஜி தான் இதுவும்…

செய்முறை வீடியோ:

நாங்கள் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம். கோழி வளர்ப்பு குறித்த என் ஆராச்சிகளை நான் இப்போது விலை மலிவான ப்ரோபயாடிக் உணவு தயாரிப்பின் பக்கம் திருப்பி இருக்கிறேன். என்ன தான் தானியங்களைக் கலந்து கொடுத்தாலும் கம்பெனி ஃபீட் மாதிரி இல்லைன்னு சொல்பவர்கள் கூட இந்த முறையில் கம்பெனி ஃபீடுக்கு இணையான ஒரு தீவனத்தை பாதிக்கும் குறைவான செலவில் தயாரித்து விட முடியும்…

ப்ரோபயாடிக் தீவனத்தை முதலில் எங்கள் கோழிகளுக்குக் கொடுத்து ஆராய்ந்து ஒரு வேளை வெற்றி பெற்றால் அதையும் நிச்சயம் பகிர்வேன்… எல்லாமே ஓப்பன் சோர்ஸ் தான்… ரகசியம் ஏதுமில்லைங்க…