Posted on Leave a comment

ஏன் சோஷியல் மீடியாக்களில் மூழ்கிக் கிடக்கிறோம் ?

எப்ப பாரு ஃபேஸ்புக் தானா…? எப்ப பாரு யூட்யூப் தானா…? எப்ப பாரு ட்விட்டர், வாட்ஸ் ஆப் தானா…?! மொபைல் பார்க்காம இருக்கவே மாட்டியா…?

நம்மை சுற்றி இருப்பவங்க இப்டி கேட்க தான் செய்றாங்க… ஆனா ஏன் சோஷியல் மீடியால இருக்கோம்ங்கற ரகசியம் நமக்கு மட்டும் தானே தெரியும்…

ஆமா ஏன்…???

மனிதனுடைய தேவைகளை ஐந்து அடுக்கா பிரிச்சிருக்கார் மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர்.

முதலில் அடிப்படையான உடல்சார் தேவைகள்:

உணவு, உடை, இருப்பிடம், சுவாசம், செக்ஸ், மலஜலம் கழித்தல்.

இவற்றை அடைவதே மனிதனின் முதல் போராட்டமாக இருக்கிறது. எவ்விதத்திலாயினும் இவற்றை அடைந்தே தான் தீர வேண்டி இருக்கிறது. இவை ஓரளவு பூர்த்தியான பின் அவனுக்கு அடுத்த தேவை ஏற்படுகிறது.

இரண்டாவதாக பாதுகாப்பு தேவைகள்:

உடல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை எதிர்பார்த்தல், குடும்ப பாதுகாப்பு, நல்ல வேலைவாய்ப்பு, வளங்களை பெருக்கி பாதுகாத்தல், சேமிப்பு இதெல்லாம் சொல்லலாம்.

இவை நிறைவேறும் போது மூன்றாவதாக சமூத தேவைகள்:

நட்புறவு, காதல், அன்னியோன்னிய உறவுகள், பாசம், நேசம் இப்படி.

சரி எல்லாமே ஓரளவு பூர்த்தியாயிருச்சு. இப்பவும் நமக்கு தேவைகள் இருக்கே.

அது தாங்க கௌரவ தேவைகள்:

பிறரிடம் இருந்து மதிப்பு மரியாதை எதிர்பார்ப்பது, சுயகௌரவம், புகழுக்கு ஆசைப்படுதல், பாராட்டை எதிர்பார்த்தல், அங்கீகாரம் தேடுதல், தன்னம்பிக்கை இவையெல்லாம்…

இங்கே தாங்க சோஷியல் மீடியாக்கள் வருது. பிறரிடமிருந்து பாராட்டையும் நம் செயலுக்கான அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று. அது சோஷியல் மீடியாக்களில் கிடைப்பதால் அதில் மூழ்கிப் போகிறது மனிதமனம். இது தான் நிதர்சனம்.

சரி அடுத்து என்ன… கடைசியா தன்னிலை புரிதல். புகழும் கூட போரடித்து போகும் நிலை இது. அதாவது ஒரு நிறைவுநிலை, நல்லது கெட்டது அறிதல், பிறருக்கு வழிகாட்டுதல், எல்லாரையும் அரவணைத்து செல்லுதல் இப்படி… இந்நிலை எல்லாருக்கும் வாய்த்தல் அரிது. எனினும் நான்காவது தேவை முழுமையாக பூர்த்தியாகும் பட்சத்தில் ஐந்தாவது தேவை மனிதனுக்கு ஏற்படுகிறது.

இதில் நாம் எங்கே நிற்கிறோம் என்று உணர்ந்தால் நமக்கான அடுத்த தேவையும் அந்த தேவைக்கான தேடலின் அவசியமும் நமக்கு நன்கு விளங்கும்.

Posted on Leave a comment

அதிகமாக டைவர்ஸ் ஆகக் காரணம் என்ன ?

டைவர்ஸ்… டைவர்ஸ்… டைவர்ஸ்…
சர்வ சாதாரணமாகி விட்டது இன்று…
அதிலும் பல திருமணங்கள் ஒரே வருடத்துக்குள் தோற்று விடுகின்றன…

பெண் வீட்டில் சொல்லும் காரணம் கணவன் மனைவியைத் தொடுவதில்லை… அன்பாகக் காதலாக இருப்பதில்லை… ஆசைகளை நிறைவேற்றுவதில்லை… சைகோ அவன்…

மாப்பிள்ளை வீட்டில் சொல்லும் காரணங்கள்… பெண் அடங்காபிடாரி… யாரையும் மதிப்பதில்லை… வேலைகள் செய்வதில்லை… போன் பேசிக் கொண்டே இருக்கிறாள்… இன்னும் சில…

தவறு எங்கே யாரிடம்…?!
கேட்பவருக்கு தான் மண்டையை பிச்சுக்கும்…

இதுக்கு என்ன தான் தீர்வு…?!

உளவியல்ரீதியில் பார்த்தால்… பெண்கள் சொல்லும் பிரச்சினைகளுக்கு பொறுமையே தீர்வு… தனக்கு ஒன்றுமே தெரியாதென்று நாணிக்கோணி படுக்கையறைக்குள் நுழையும் பெண் தன் கணவனுக்கு மட்டும் எல்லாமே தெரிந்திருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்…?! வெட்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானதல்லவா…

கொஞ்சம் அவகாசம் தந்து, மனம் போல நடந்து கொண்டால் யாவும் சுபமாகுமே… ஆனால் அப்படி பொறுமை இல்லாமல் அவனை மட்டம் தட்டுவது, வம்பிழுத்து சண்டை போடுவது போன்ற காரணங்களால் அவனால் உடலளவில் தயாராக முடிவதில்லை… அதை ஆண்மைக்குறைவு என்று முத்திரை குத்தி வீட்டில் சொல்லி பெரிதுபடுத்தி டைவர்ஸ் வரை போய் விடுகிறார்கள்…

அடுத்ததாக ஆண்கள் சொல்லும் காரணம் சண்டை போடுகிறாள், யாரையும் மதிப்பதில்லை என்பது… அந்நிய சூழலில் வளர்ந்த பெண்ணின் குணம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். எடுத்ததுமே தனக்கு நல்ல மனைவியாக தன் பெற்றோருக்கு நல்ல மருமகளாக வாழ வேண்டுமென்று எதிர்பார்ப்பது மடமை…

அன்பு காட்டி அரவணைத்து தன் வழிக்குக் கொண்டு வந்து தான் அவளைத் திருத்த வேண்டுமே தவிர… அதற்காக படுக்கையில் ஒதுக்கி வைத்தால் அது தன் மேலேயே அவள் அவதூறு சொல்ல வழி ஏற்படுத்தி விடும்… மனைவியின் மேல் பிரியத்தைக் காட்டி விட்டு அந்த பிரியம் இல்லையெனில் எத்தனை கஷ்டமென்று உணர்த்துவது ஆணின் கடமை மற்றும் திறமை… அதை உணர்த்தி விட்டால் பெரும்பாலான பெண்கள் அவன் மனம் போல மாறி விடுவார்கள்…

இந்த டைவர்ஸ் கலாச்சாரத்தில் பெற்றோரில் பங்கும் மிகையானது… பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டால் அவர்களின் வீட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது… தலையிடுவது ஒருபுறம் இருக்கட்டும்… காது கொடுத்து கேட்கக் கூட கூடாது… கேட்டால் வீணாக அவள் வாழ்வில் தலையிடுவோம். பின் அவள் வாழ்வு தான் கேள்விக்குறியாகும்…

முதன்முதலில் பள்ளியில் கொண்டு விடுகிறோம் நம் குழந்தைகளை… குழந்தை அழுகிறதென்று வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறோமா…?! இல்லையே… அவள் பழகும் வரை மனதைக் கல்லாக்கிக் கொண்டு காத்திருக்கிறோமல்லவா… கல்விக்காக… அதே போல தான் திருமணம் முடிந்து போனாலும் மகள் கண்ணைக் கசக்கினாலும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்… அவள் வாழ்க்கைக்காக…

ஆசிரியர் திட்டினால் அது அவளுடைய நல்லதுக்கு தான் என்று பொறுமை காப்பதைப் போல தான் கணவன் திட்டினாலும் சண்டை பிடித்தாலும் “உன் பிரச்சினையை நீயே சமாளித்துக் கொள்… என்னிடம் சொல்லாதே…” என்று சொல்லி நாசூக்காக விலகி விட்டால் வாழ்வின் சூட்சுமம் அறிந்து வாழப் பழகிக் கொள்வார்கள்…

ஆண்மகனும் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை தன் பெற்றோரிடம் சொல்லக் கூடாது. தன்னை நம்பி வந்தவள் தன் ஆதங்கங்களை தன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வாள் என்று உணர்ந்து அவள் மனம் போல நடந்து கொண்டால் பிரச்சினை வராதல்லவா…

ஒவ்வொரு திருமணத்துக்கு முன்பும் ப்ரீமேரிட்டல் கவுன்சிலிங் அவசியம். அதுக்காக செலவு செய்து தான் கற்க வேண்டும் என்பதில்லை. பெற்றோரே அதைத் தரலாம் அல்லது வேறு உறவினர்களும் சொல்லித் தரலாம்… என்ன தான் செல்லம் செல்லமாக வளர்ந்திருந்தாலும் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்று புரிய வைக்க வேண்டும். மனதளவில் அவர்களை திருமண வாழ்க்கைக்கு தயார்ப்படுத்த வேண்டும்…

அதுக்காக… பெற்றோர் தமக்குக் கிடைத்த கசப்புகளை வைத்து மாமியார் என்றால் பேய், நாத்தனார் என்றால் பூதம், ஆரம்பத்திலேயே உன் கணவனைக் கைக்குள் போட்டுக் கொள் என்றெல்லாம் உபதேசம் செய்தால் கதையே முடிந்து விடும்… “யார் எப்படி இருந்தாலும் சரி, நீ இனிமையானவளாக இரு… அதிகப்பட்ச பிரியம் காட்டு…” என்று சொல்லித் தர வேண்டும்… நம் பிள்ளைகளின் குணத்தை இனிமையாக்க நாம் முயற்சித்தால் போதும்… பிறரின் குணத்தில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கு…

விருப்பம் இல்லாத திருமணங்களைக் கட்டாயப்படுத்தி செய்து வைக்கக் கூடாது. அது மகா தப்பு. பின்னர் டைவர்ஸில் முடிந்த பின் பெற்றோர் தான் அதிகமாக அழ வேண்டி இருக்கும். வாழ்க்கைன்னா என்னவென்று புரிந்த பின் இல்லறத்தில் நுழைந்தால் அது நிச்சயமாகத் தோற்காது…